×

கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி சொத்துக்கள் மீட்பு: 3 கடைகள் பொருட்களுடன் சீல்

சென்னை: இந்து அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கை: மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள சுமார் 4920 சதுரஅடி பரப்பளவுள்ள மனை லட்சுமணன் என்பவருக்கு மாத வாடகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மனை வாடகைதாரர் லட்சுமணன் ஆவார். அம்மனையினை விஜயா, சங்கர், அமாவாசை மற்றும் ராஜகோபால் ஆகிய நான்கு நபர்கள் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி குடியிருந்தும், கடைகளை கட்டி உள்வாடகைக்கு விட்டும் இருந்தனர்.

மனை சுமார் 4920 சதுரஅடிக்கு அரசாணைகளின்படி நியாய வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும் நியாய வாடகைகளை செலுத்தாததால் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி நாளிட்ட குறிப்பினில் முன்மொழிவுகள் அனுப்பப்பட்டு சென்னை இணை ஆணையரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வெளியேற்றிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் உள் வாடகைதாரர்கள் சங்கர், அமாவாசை ஆகியோர் ஆக்கிரமித்திருந்த 1874 சதுரஅடி மனை கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30ம் தேதியன்று ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

மேலும் இடத்தில் 1525 சதுரஅடி பரப்பளவுள்ள மனையில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிருந்த விஜயா என்பவர் ஆணையர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். உத்தரவு தள்ளுபடி செய்யப்பட்டது. விஜயா என்பவர் 1525 சதுரஅடி மனையில் வணிக நோக்கிலான மூன்று கடைகளை கட்டி ஒரு கடையை நடத்தி வந்தார். இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டிருந்தார். நேற்று விஜயா என்பவர் ஆக்கிரமித்திருந்த 1525 சதுரஅடி பரப்பளவுள்ள மனையில் இருந்த மூன்று கடைகள் பொருட்களுடன் பூட்டி சீலிடப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. சுவாதீனம் எடுக்கப்பட்ட சொத்தின் பரப்பளவு 1525 சதுரஅடி மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Kabaliswarar Temple ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா :...